TRIPS waiver: கண்ணோட்டம் மற்றும் பின்னணி

செல்வத்திற்கு முன் ஆரோக்கியம்

இதை உள்ளே படியுங்கள்: English | हिंदी | தமிழ் | ಕನ್ನಡ | ലയാളം

கண்ணோட்டம்

கொரோனா வைரஸை அழிப்பதற்கான அறிவியல் செயல்முறைகளின் வளர்ச்சிக்கு பொது நிதியுதவி வழிவகுத்தது – ஆனால் இப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துரிமைகளின் காரணமாக, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கும், லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே பல அரசுகள் – கூட்டமைப்புகள் மற்றும் குடிமை சமூக அமைப்புகளின் ஆதரவுடன் – நோய் தடுப்பு மருந்துகள், முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் மீதான தனியார் காப்புரிமைகளை தள்ளுபடி செய்யுமாறு உலக வர்த்தக அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளன: ஏனெனில், பொதுமக்களின் நலனைக் காட்டிலும் தனியார் நிறுவனங்களின் லாபங்களுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் அளித்தல் கூடாது.

பின்னணி

உலகளவில் பணியாளர்களை அசாதாரணமான தியாகங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு இந்த பெருந்தொற்று இட்டுச்சென்றுள்ளது.

அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் கோவிட் நோயிலிருந்து மீள அதற்கான மருந்துகள், தடுப்பூசிகள், பரிசோதனைகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் ஆகியன ஏற்புடைய விலையில் கிடைப்பது அவசியமாகும். இருப்பினும், உலக வர்த்தக அமைப்பின் TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) எனப்படும் வணிகம் தொடர்பான தனி சொத்துரிமைகள் ஒப்பந்தமானது மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏகபோக அதிகாரத்தை வழங்குகிறது. இவ்வொப்பந்தம் நிறுவனங்களை செயற்கையாக தம் விருப்பத்திற்கேற்ப உலகளாவிய மருந்து விநியோகத்தினை கட்டுப்படுத்தி, அநியாய லாபம் ஈட்டவும், உலகில் பலருக்கும் கட்டுப்படியாகாத விலையினை நிர்ணயிக்கவும் அனுமதிக்கிறது.

இந்த நோயிலிருந்து நாம் மீள்வதற்காக முன்களப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றார்கள். அவர்கள் ஆபத்தான சூழல்களை கடந்து வந்துள்ளார்கள். தங்களுக்கான பிரத்தியேக பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) இல்லாமல், குறைந்தபட்ச அல்லது எந்தவொரு இடைவேளையும் இல்லாமலும் கூடுதல் நேரம் பணிபுரிந்துள்ளனர். தகுந்த பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் உயிரிழக்க நேர்ந்துள்ளது.

தடுப்பூசிகளை எடுத்து செல்லவும், அவற்றை செலுத்தவும் அதிக எண்ணிக்கையிலான புதிய முன்களப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

இந்த இக்கட்டான சூழலிலிருந்து மீள மற்ற அனைவரும் கடும் உழைப்பையும், தியாகங்களையும் செய்துவருகையில்; இந்த பெருந்தொற்றினை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மருந்து நிறுவனங்கள் தங்களது ஏகபோக காப்புரிமை என்னும் அதிகாரத்தின் மூலம் லாபம் ஈட்டுவதை அனுமதிக்கக்கூடாது.

அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா “கோவிட்-19 நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வது, கட்டுப்படுத்துவது மற்றும் சிகிச்சை அளிப்பது ஆகியவற்றிற்கு ட்ரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்ற ஒரு முறையான கோரிக்கையை விடுத்தன.

அதனைத் தொடர்ந்து 55-க்கும் மேற்பட்ட நாடுகள் அதே கோரிக்கையை வழிமொழிய அதற்கு பல நாடுகள் ஆதரவினையும் தெரிவித்தன. கோரப்பட்ட இந்த விலக்கு அளிக்கப்படாவிட்டால்- இந்த பெரிய மருந்து நிறுவனங்கள், மற்ற உற்பத்தியாளர்களையும் கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் உற்பத்தி செய்வதினை கட்டுப்படுத்த முடியும். அதனால், உற்பத்தியை அதிகரிப்பது என்ற நோக்கம் பாதிக்கப்படும்.

பெரிய மருந்து நிறுவனங்கள் சந்தையில் ஒரு ஏகபோக அதிகாரத்தை பெறுவதற்கும், அரசாங்கங்களுக்கும் கூட விலையை நிர்பந்திக்கும் சர்வாதிகாரத்தையும் உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிமுறைகள் வழிவகுக்கின்றன; இதனால் நோயிலிருந்து ஆரோக்கியமாக மீள்வதற்கு அரசுகள் பொது நிதியை செலவு செய்ய நேரிடும்.

தற்போதைய பெருந்தொற்று காலம் போன்ற“அசாதாரணமான சூழ்நிலைகளில்” சொத்துக்களின் மீதான தனியுரிமைகளை தள்ளுபடி செய்வதை உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தம் அனுமதிக்கிறது. இந்த ட்ரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தத்தில் உள்ள தளர்வுகள் உலகலாவிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தால், ஒரு விலக்கு அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு, ஐநா மனித உரிமைகள் வல்லுநர்கள், யூனிடெயிட் (UNITAID) மற்றும் யுஎன்எயிட்ஸ் (UNAIDS) ஆகிய அமைப்புகள் இந்த தள்ளுபடி செய்யும் கோரிக்கையை ஆதரிக்கின்றன. இண்டஸ்ட்ரிஆல் குளோபல் யூனியன் (IndustriALL Global Union), பப்ளிக் சர்வீசஸ் இண்டர்நேஷனல் (PSI) மற்றும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு (ITUC) உள்ளிட்ட சர்வதேச தொழிற்சங்க இயக்கங்கள் இந்த கோரிக்கையை முன்னதாகவே ஆதரித்திருந்தன. சமீபத்தில், யுஎன்ஐ குளோபல் யூனியன் (UNI Global Union) மற்றும் லேபர் 20 (Labour 20) ஆகிய அமைப்புகளும் தங்கள் ஆதரவினை வழங்கின.

இந்த விலக்கிற்கு ஆதரவு அளிப்பதன் மூலம், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இதர பொதுப்பணி தொழிலார்களும் இதனை ஆதரிப்பதை தேசிய அரசுகளுக்குத் தெரியப்படுத்தி, அவற்றின் ஆதரவையும் பெறுவதற்கு தொழிற்சங்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

Key info

பெரும் மருந்து நிறுவனங்களின் லாபத்தினைக் காட்டிலும் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென G7 மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள அரசாங்கங்களுக்கு உலகெங்கிலும் உள்ள சுகாதார பணியாளர்கள் விடுக்கும் கோரிக்கை. #Covid-19 தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை அனைவரிடமும் பகிர்க!